ஐஎஸ்ஐக்கு இந்திய சிம் கார்டுகள்: டெல்லியில் இளம் தம்பதி கைது


 புதுடெல்லி: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இந்திய சிம் கார்டுகளை வாங்கி அனுப்பியதாகக் கூறப்படும் டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதியை காவல் துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.


தெற்கு டெல்லியின் சாராய் காலே கான் பகுதியைச் சேர்ந்த முகமது சாஹில் (25), அவரது மனைவி சமீரா (21) ஆகியோர் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 கைபேசிகளில், பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுடனான உரையாடல்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.


இந்திய பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களைச் சேகரிக்கும் நோக்கில், இந்திய சிம் கார்டுகளை பெற்று துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு இந்தத் தம்பதி அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்திய எண்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, இந்திய வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்திய ராணுவ முகாம்களை கண்காணித்தல், ராணுவ வீரர்கள் தொடர்பான விவரங்களை சேகரித்தல் மற்றும் இந்தியாவில் ஆட்களைச் சேர்ப்பது போன்ற பணிகளும் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.


2024 மற்றும் 2025 ஆண்டுகளில் 8 இந்திய சிம் கார்டுகளை துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதற்காக இந்தத் தம்பதியிடம் ரூ.30,000 பணம் கைமாறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous Next

نموذج الاتصال