பஞ்சாப் இடமாற்ற மோசடி புகார்: டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம்

 

சண்டிகர்: பஞ்சாபில் அரசு அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிட நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யுமாறு அமலாக்கத் துறை, பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.


பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி ராஜ்பீர் சிங் குமான், இந்த இடமாற்றம் மற்றும் பணியிட நியமன முறைகேட்டுக்கு தலைமை தாங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த முறைகேட்டில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரின் இடமாற்றம் மற்றும் பணியிட நியமனங்கள் தொடர்புடையதாகக் கூறப்பட்டுள்ளது.


தனியார் நபரான நிதின் கோஹல் மற்றும் மற்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு அமலாக்கத் துறை வலியுறுத்தியுள்ளது. ராஜ்பீர் சிங் குமானுடன் தொடர்புடைய நிதின் கோஹல் மற்றும் பிர் தேவேந்திர் ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.


அரசு அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிட நியமனங்களில் செல்வாக்கைப் பயன்படுத்துதல், ரகசிய அரசு ஆவணங்களை கசியவிடுதல், ஆயுத உரிமங்களைப் பெற உதவுதல் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருதல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவற்றுக்கு பணம் மற்றும் பிற நன்மைகள் பெறப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.


இந்த விவகாரத்தில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்பான ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் காவல்துறையின் விசாரணைப் பிரிவிடம் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேவையான ஆவணங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை அமலாக்கத் துறையிடம் கோருவது அல்லது விசாரணை நடத்துவது குறித்து பஞ்சாப் அரசு பரிசீலித்து வருகிறது. அரசியல் வட்டாரத்திலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Next

نموذج الاتصال