திருவனந்தபுரம்: தமிழகத்திலிருந்து கற்கள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என கேரள முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.
தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம் ஆகஸ்ட் 20-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு தமிழக முதல்வர் விஜய்யை கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்தித்து பேசினார். அப்போது இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனை நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என முதல்வர் விஜய் உறுதியளித்ததாகவும், கேரளாவுக்கு சாதகமான முடிவை எட்ட விரைவில் மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சதீசன் கூறினார்.
தமிழகத்தில் இருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி, எம் சாண்ட் போன்ற கட்டுமானப் பொருட்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்பட்டு வந்தன. இதனால் தமிழகத்தில் கனிம வளங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயரும் அபாயம் இருப்பதாகவும், தொடர்ச்சியான கனிம வள எடுப்பால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையால் கேரளாவில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கேரளாவுக்கு தளர்வு அளிப்பது குறித்து தற்போது ஆலோசனை நடைபெற உள்ளது.