தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் மற்றும் குடியிருப்புகள் தொடர்பான களப்பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்தப் பணிக்காக மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்புப் பணியாளர்கள் வீடு தோறும் சென்று தகவல்களை சேகரிக்க உள்ளனர்.
இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இந்தப் பணி நடைபெறுகிறது. முன்னதாக சுய கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ களப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கணக்கெடுப்பின்போது வீடுகளின் அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், இணைய வசதி, வாகனங்கள் உள்ளிட்ட வீட்டு வசதிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும். மேலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை விவரங்களும் பதிவுசெய்யப்பட உள்ளன.
கணக்கெடுப்புப் பணியாளர்கள் அடையாள அட்டையுடன் வீடு தோறும் நேரில் சென்று தகவல்களைப் பதிவு செய்வார்கள். பொதுமக்கள் துல்லியமான தகவல்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவல்கள் அரசின் திட்டமிடல், வளங்கள் ஒதுக்கீடு, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். களப்பணி ஆகஸ்ட் 30 வரை நடைபெற உள்ளது.