இளைஞரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்: பெண் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது

 

சென்னை: இளைஞரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


சென்னை சூளைமேடு தமிழ் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன் (32). மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு அவரது மனைவி தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார்.


இந்த நிலையில், சுதர்சன் வசித்து வரும் வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் நமீதா (22) என்ற பெண்ணிடம், தான் அவரைக் காதலிப்பதாக சுதர்சன் கூறியதாகத் தெரிகிறது. இதை நமீதா தனது செல்போனில் பதிவு செய்துகொண்டதாக கூறப்படுகிறது.


பின்னர் இதுகுறித்து தனது தோழியும் வழக்கறிஞருமான மோனிகாவிடம் (32) நமீதா தெரிவித்துள்ளார். இந்த பதிவை பயன்படுத்தி சுதர்சனை மிரட்டி பணம் பறிக்கலாம் என மோனிகா திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.


இதன்படி, கடந்த மாதம் 27-ம் தேதி நமீதா ஆசை வார்த்தைகள் கூறி சுதர்சனை தனது தோழியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மோனிகா, அவரது கணவர் பாலகிருஷ்ணன், நண்பர் கணேஷ், நமீதா மற்றும் சிவரஞ்சனி ஆகியோர் சுதர்சனை சூழ்ந்துகொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.


இந்த விவகாரத்தை அவரது மனைவியிடமோ அல்லது போலீஸாரிடமோ தெரிவித்து சிறைக்கு அனுப்பிவிடுவோம் என்றும், இதை வெளியே சொல்லாமல் இருக்க ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.


இதையடுத்து சுதர்சன் அளித்த புகாரின் பேரில் சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நமீதா, வழக்கறிஞர் மோனிகா, பாலகிருஷ்ணன், கணேஷ், சிவரஞ்சனி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Previous Next

نموذج الاتصال