சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு

 

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகள் இன்று ஆகஸ்ட் 9-ம் தேதி பதவியேற்கின்றனர். அவர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.


சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 51 நீதிபதிகள் பணியில் இருந்த நிலையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதன்படி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 10 பேரையும், மாவட்ட முதன்மை நீதிபதிகள் 9 பேரையும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.


முதல் கட்டமாக கே. கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியல், என். ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார், ஆர். ராஜேஷ் விவேகானந்தன் ஆகிய 5 பேர் நிரந்தர நீதிபதிகளாகவும், எஸ். ரவிக்குமார், என். திலீப்குமார், இ. மனோகரன், டாக்டர் பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள், எஸ். கார்த்திகேயன், பி. முருகேசன், என். குணசேகரன் ஆகிய 10 பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


புதிய நீதிபதிகளின் பதவியேற்பு விழா சென்னை உயர் நீதிமன்ற கலை அரங்கில் இன்று மதியம் 1.35 மணியளவில் நடைபெறுகிறது.


கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் 15 நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்ற நிலையில், அதன்பிறகு தற்போது அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்கின்றனர்.


இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்து, காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆக குறைகிறது.

Previous Next

نموذج الاتصال