ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் ரூ.1,002 கோடி மதிப்பில் குவாண்டம் தொழில்நுட்ப மையம் அமைக்கும் திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் குவாண்டம் கணினி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மையம் உருவாக்கப்பட உள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கணினி தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு இந்த மையம் முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் முதலீடுகள் அதிகரிப்பதுடன், உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், அமராவதியை முன்னணி தொழில்நுட்ப மையமாக உருவாக்கும் முயற்சிக்கு இது ஊக்கமளிக்கும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன், எதிர்கால தொழில்நுட்பத் துறைகளில் மாநிலத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் முக்கிய முயற்சியாக இந்த குவாண்டம் மையம் அமையும் என அரசு தெரிவித்துள்ளது.