டெஹ்ரான்: ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் சேதப்படுத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விவகாரத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா கடந்த சில நாட்களாக ஈரானின் பல்வேறு ராணுவ மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
சமீபத்திய தாக்குதல்களில், பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள பாலங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும், ஈரான்ஷர் ராணுவ தளத்தில் நடைபெற்ற தாக்குதலில் 7 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஈரானின் 3 ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழித்ததாக ஜோர்டான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் சேதமடைந்ததாக ஈரான் ராணுவம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும், சிரியாவின் அல்-டன்ஃப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளமும் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி தங்களது முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்க தாக்குதல்கள் தொடரும் வரை அந்த வழியாக எரிபொருள் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்றும் எச்சரித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா மற்றும் ஜோர்டான் தரப்பில் அதிகாரப்பூர்வமான பதில் வெளியாகவில்லை.