மதுரை: அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள், அரசு அல்லது கல்வித்துறை பிறப்பிக்கும் சட்டப்பூர்வமான உத்தரவுகளை செயல்படுத்த மறுக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் டபிள்யூ. புதுப்பட்டி ஸ்ரீ ரேணுகா இந்து உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றிய சாரதா, உபரி ஆசிரியர் என்ற காரணத்தால் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால், அந்த பள்ளி ஆண்கள் பள்ளி என்பதாலும், பெண் ஆசிரியர்களுக்கான போதிய வசதிகள் இல்லை என்பதாலும் அவரை பணியில் சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுத்தது. பின்னர் அவரை மற்றொரு பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்த இடமாற்றத்தை எதிர்த்து ஆசிரியர் சாரதா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். முன்னதாகவே, குருஞானசம்பந்தர் பள்ளியில் பணியமர்த்தப்பட்டால், பெண் ஆசிரியர் என்ற அடிப்படையில் எந்தவித சிறப்பு வசதிகளையும் கோரமாட்டேன் என்று அவர் நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்திருந்தார்.
பள்ளி நிர்வாகத்தின் வாதத்தை நிராகரித்த நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, குருஞானசம்பந்தர் பள்ளி அரசு நிதியுதவி பெறும், சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளி என்பதால், அரசின் சட்டப்பூர்வ உத்தரவுகளை பின்பற்ற வேண்டிய கடமை அதற்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், "ஆண்கள் பள்ளி என்பதாலும், பெண் ஆசிரியர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதாலும் ஆசிரியரை பணியில் சேர்க்க மறுப்பது ஏற்க முடியாத காரணம். ஆண்கள் பள்ளியில் பெண் ஆசிரியரை நியமிப்பதை எந்தச் சட்டமும் அல்லது விதிகளும் தடை செய்யவில்லை" என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
அரசு மானியம் பெறும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
அரசு மானியம் பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள், சட்டப்பூர்வமான அரசாணைகள் மற்றும் பணியிட மாற்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்றும், அவற்றை மீறினால் மானியத்தை நிறுத்தி வைக்கும் அதிகாரம் அரசுக்கு இருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
4 வாரத்தில் நடவடிக்கை
இதனையடுத்து, ஆசிரியர் சாரதாவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது இடமாற்ற உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், அவர் முதலில் பணியாற்றிய பள்ளியில் தற்போது ஏற்பட்டுள்ள காலியிடத்தில் அவரை நியமிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையை 4 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
