லண்டன்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி (Labour Party) நாடாளுமன்ற உறுப்பினர் கனிஷ்கா நாராயண், பிரிட்டனின் முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அமைச்சரவை மாற்றத்தில், செயற்கை நுண்ணறிவு துறைக்கு தனி அமைச்சக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கனிஷ்கா நாராயண் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். இதன் மூலம், பிரிட்டனில் ஏஐ துறைக்கென அமைச்சரவை மட்டத்தில் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சராக அவர் வரலாறு படைத்துள்ளார்.
பீகாரின் முசாஃபர்பூரில் பிறந்த கனிஷ்கா நாராயண், சிறுவயதில் குடும்பத்துடன் வேல்ஸ் மாநிலத்தின் கார்டிஃப் நகருக்கு குடிபெயர்ந்தார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற அவர், 2024-ஆம் ஆண்டு வேல் ஆஃப் கிளாமோர்கன் (Vale of Glamorgan) தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான இளநிலை அமைச்சராக பணியாற்றிய அனுபவமுள்ள கனிஷ்கா நாராயண், தற்போது அமைச்சரவை மட்டத்தில் பதவி உயர்வு பெற்றுள்ளார். பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் அரசின் டிஜிட்டல் சேவைகளில் செயற்கை நுண்ணறிவை விரிவாகப் பயன்படுத்தும் திட்டங்களை முன்னெடுப்பதில் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.