சென்னை:
ஆவடியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் சாம்பாரில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு பாருத்திப்பட்டு ஈகோ பூங்கா பகுதியில் காலை உணவு வழங்கப்பட்டது. உணவு விநியோகிக்கப்பட்ட பின்னர் சாம்பாரில் இறந்த பல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நேரத்திற்குள் பலர் உணவை சாப்பிட்டிருந்ததால், பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவியது. தொடர்ந்து சிலருக்கு வாந்தி, மயக்கம், குமட்டல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். உணவு தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட அலட்சியம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.