தூத்துக்குடி:
தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, போலீசார் தாக்கியதால்தான் மரணம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம், சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறப்பட்ட வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அருணாச்சலத்தை காவல்துறையினர் விசாரணையின்போது கடுமையாக தாக்கியதால் தலையிலும் உடலின் பல பகுதிகளிலும் காயம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, உடலை பெற்றுக்கொள்ள மறுத்தனர்.
இதற்கிடையில், காவல்துறை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. காவல் நிலையத்தில் இருந்தபோது அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், இந்த நிகழ்வு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளைஞரின் உயிரிழப்பு தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.