சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம் கோரி வழக்கு... தமிழக அரசுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 Madurai (மதுரை): தெலங்கானா மாநிலத்தில் நடைமுறையில் உள்ளதுபோல், சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு, தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா தாக்கல் செய்த மனுவில், சிறைத்தண்டனை என்பது குற்றம் செய்த நபருக்கான தண்டனையாக இருந்தாலும், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் போன்ற குற்றமற்ற குடும்ப உறுப்பினர்களே பெரும்பாலும் கடுமையான பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளைச் சந்திப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆய்வு

மனுவில் மேலும், தென் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட சிறைவாசிகளின் குடும்பங்களை ஆய்வு செய்ததில், பல குழந்தைகள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தியதும், பெண்கள் கடன் சுமையால் கூலி வேலைக்கு செல்லும் நிலையும், வயதான பெற்றோர் பேரக்குழந்தைகளை பராமரிக்கும் சூழலும் இருப்பது தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனால், குற்றம் செய்யாத குடும்ப உறுப்பினர்களும் மறைமுகமாக தண்டனையை அனுபவிக்கும் நிலை உருவாகியுள்ளதாக மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

சிறைத்துறைக்கு வருவாய் கிடைப்பதாக வாதம்

தமிழக சிறைத்துறையில் நெசவு, தையல், காலணி தயாரிப்பு, பேக்கரி, தச்சு வேலை, விவசாயம், செங்கல் தயாரிப்பு, புத்தக பைண்டிங், சோப்பு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "Freedom Bazaar" மற்றும் "Prison Bazaar" விற்பனை மையங்கள் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி அரசுக்கும், சிறைத்துறை நல நிதிக்கும், உற்பத்தி நிதிக்கும் ஒதுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலங்கானா முறைபோல் திட்டம் கோரிக்கை

இந்த நிதியை பயன்படுத்தி, தெலங்கானா மாநிலத்தில் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய மனுதாரர், அதேபோன்ற திட்டத்தை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

இந்த மனுவை நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் சிறைத்துறை டிஜிபி ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது.


Previous Next

نموذج الاتصال