சென்னை (Chennai): மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உறுப்பினரை சேர்ப்பது மாநில உரிமைகளுக்கும், பல்கலைக்கழகத் தன்னாட்சிக்கும் எதிரானது என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம. ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநிலச் சட்டங்களின் கீழ் நிறுவப்பட்டவை என்றும், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடைமுறைகளும் சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க மாநில அரசு வழங்கியுள்ள இசைவு உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழகச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேடல் குழு அமைப்பை மாற்ற வேண்டுமெனில், அதற்கான சட்டத் திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டத் திருத்தம் இல்லாமல் வெளிப்புற ஒழுங்குமுறை அமைப்பின் பிரதிநிதியை தேடல் குழுவில் சேர்ப்பது பல்கலைக்கழகத் தன்னாட்சியைக் குறைப்பதுடன், மாநில சட்டப்பேரவையின் அதிகாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கொள்கையின்படி மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் இருப்பதாகவும், இதில் மத்திய அமைப்பின் கட்டாய பிரதிநிதித்துவம் மாநில உரிமைகளுக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், யுஜிசியின் முக்கியப் பொறுப்பு உயர்கல்வித் தரநிலைகளை வகுத்தல், மானியங்கள் வழங்குதல் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிடுதல் மட்டுமே என்றும், மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிர்வாக நியமனங்களில் நேரடியாக பங்கேற்பது அதன் அதிகார வரம்பை விரிவுபடுத்துவதாகும் என்றும் கூறியுள்ளார்.
மத்திய அமைப்பின் பிரதிநிதியை நியமிப்பதில் ஏற்படும் தாமதம், துணைவேந்தர் நியமன செயல்முறையையும் பாதிக்கக்கூடும் என்றும், மாநிலச் சட்டத்தில் இடம்பெறாத உறுப்பினரை தேடல் குழுவில் சேர்த்து மேற்கொள்ளப்படும் நியமனங்கள் நீதிமன்றத்தில் சவாலுக்குள்ளாகும் வாய்ப்பும் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
உயர் கல்வித் தரநிலைகளையும் மாநில உரிமைகளையும் சமநிலையுடன் பாதுகாக்கும் நடைமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் என்றும், யுஜிசி உறுப்பினரை தேடல் குழுவில் சேர்க்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் கல்வியாளர்கள் சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
