சென்னை:
இந்தியாவில் இளம் மோட்டார் பைக் பந்தய வீரர்களை உருவாக்கும் நோக்கில் புதிய பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட 10 TVS Apache RR 200 Mini மோட்டார் சைக்கிள்கள் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பிடம் (MMSC) ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை சென்னை மெட்ராஸ் இன்டர்நேஷனல் கார்ட்டிங் அரங்கில் நடைபெறும் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட உள்ளன.
பயிற்சியின் போது அனுபவமிக்க பயிற்சியாளர்கள் மற்றும் முன்னணி பந்தய வீரர்களின் வழிகாட்டுதலுடன், பங்கேற்பாளர்களுக்கு மோட்டார் பைக் பந்தயத்தின் அடிப்படை திறன்கள், பாதுகாப்பு நடைமுறைகள், கட்டுப்பாடு, துல்லியம் மற்றும் ஒழுக்கம் உள்ளிட்ட அம்சங்கள் கற்பிக்கப்படும்.
15 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டி பந்தயங்களில் பங்கேற்கும் முன், சிறு வயதிலிருந்தே முறையான பயிற்சி அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய இந்திய பந்தய வீரர்களை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலம் இளம் திறமைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவர்களை படிப்படியாக தேசிய மற்றும் சர்வதேச மோட்டார் பைக் பந்தயப் போட்டிகளுக்கு தயார்படுத்தும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.