சென்னை:
தமிழக அரசின் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ இனி ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கு. காமராஜரின் கல்வி மற்றும் மாணவர் நலப் பணிகளைப் போற்றும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அரசாணை மூலம் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பயனளித்து வருகிறது. அண்மையில், இந்தத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
திட்டத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதோ தவிர, மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், உணவுப் பட்டியல் மற்றும் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் பள்ளி வருகையை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.