“சபரிவர்மன் மரணம்: நடவடிக்கைக்கு தயக்கம் ஏன்?” – அரசை கேள்வி கேட்ட கனிமொழி

விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கவும் திமுக எம்.பி. வலியுறுத்தல்

சென்னை / நாகர்கோவில்: நாகர்கோவில் கிளைச் சிறையில் உயிரிழந்த விசாரணைக் கைதி சபரிவர்மன் குடும்பத்தினரை சந்தித்த பிறகு, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, வழக்கின் விசாரணை, அரசு நடவடிக்கை மற்றும் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் எந்த காரணத்திற்காக காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டார் என்பது தெளிவாக இல்லை. பின்னர் மீண்டும் அவரை ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தனர். குடும்பத்தினர் சந்தித்தபோது அவர் நலமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக கூறப்பட்டது” என்றார்.

மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடலில் பல்வேறு காயங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட கனிமொழி, “உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தும், உயிரிழப்புக்கான காரணம் தெளிவாக விளக்கப்படவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து, “இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை அரசு தரப்பில் இருந்து அமைச்சர் அல்லது முதல்வர் யாரும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. குடும்பத்தினருக்கு அரசு வேலை உள்ளிட்ட உதவிகள் குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை” என குற்றம்சாட்டினார்.

சபரிவர்மனின் குடும்பத்தினர் தற்போதைய விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும், வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு (CBI) மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக கனிமொழி தெரிவித்தார்.

மேலும், “குடும்பத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும், உடலை பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் உண்மை வெளிவர முழுமையான, வெளிப்படையான விசாரணை அவசியம்” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த வழக்கில் அரசு முழுப் பொறுப்புடன் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கனிமொழி கோரிக்கை விடுத்தார்.

Previous Next

نموذج الاتصال