அனைத்து நாடுகளுக்கும் ஏஐ பலன்கள் கிடைக்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலர்

 

ஷாங்காய்: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பலன்கள் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்றும், அதன் நிர்வாகம் சில நாடுகள் அல்லது நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கக் கூடாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் வலியுறுத்தியுள்ளார்.


சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவு 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய வாய்ப்பாக இருப்பதுடன், சரியான நிர்வாகம் இல்லையெனில் மிகப்பெரிய அபாயமாகவும் மாறக்கூடும் என்று தெரிவித்தார்.


மருத்துவம், கல்வி, உணவு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னெடுப்பதில் செயற்கை நுண்ணறிவுக்கு முக்கிய பங்கு இருப்பதாக குறிப்பிட்ட அவர், வளரும் நாடுகளும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் சமமான பங்களிப்பையும் வாய்ப்பையும் பெற வேண்டும் என்றார்.


உலகளவில் கணினி திறன், முதலீடு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் சில நாடுகள் மற்றும் நிறுவனங்களிடமே அதிகமாக குவிந்திருப்பதாகவும், இந்த ஏற்றத்தாழ்வுகள் நீடித்தால் வருமானம், வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சமத்துவமின்மை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.


செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஐ.நா. ஆதரவுடன் உருவாக்கப்படும் உலகளாவிய வலையமைப்பிற்கும், செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய நிதியத்திற்கும் நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


மேலும், வளரும் நாடுகள் தங்களது சொந்த மொழிகள், தரவுகள் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கும் திறன் பெற வேண்டும் என்றும், சர்வதேச பாதுகாப்புத் தரங்கள் மற்றும் சட்ட அடிப்படையிலான பொதுவான நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


குழந்தைகளிடம் பயன்படுத்தப்படும் எந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பும் அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பிறகே பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி உலகளாவிய சமத்துவத்தை அதிகரிக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் அந்தோணியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال