மதுரை: இந்திய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்கான தேசிய அறக்கட்டளை (INTACH) சார்பில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேசிய அளவிலான வரைகலை மற்றும் கட்டுரைப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவி ச. சஸ்மிதா வெற்றி பெற்றுள்ளார்.
‘Tree of Life’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாணவர்கள் ஏதேனும் ஒரு பூர்வீக மரம், செடி அல்லது மலரை மையமாகக் கொண்டு ஓவியம் வரைந்து, அதனைச் சார்ந்த 200 வார்த்தைகளுக்குள் கட்டுரை எழுத வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டது.
இந்தப் போட்டியில் நாடு முழுவதும் 7 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது படைப்புகளை அனுப்பி பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் போட்டியில் கலந்து கொண்ட நிலையில், மதுரை மகாத்மா குளோபல் கேட்வே பள்ளி மாணவி ச. சஸ்மிதா தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டெல்லியில் கல்விச் சுற்றுலா மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.