விருத்தாசலம், கடலூர்: தமிழகம் முழுவதும் வணிக வரித்துறையின் சிறப்பு சுற்றுப்படை மேற்கொண்டு வரும் தொடர் ஆய்வுகள் காரணமாக வணிகர்கள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேவேளையில், முறைகேடு புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
வணிக வரித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பு சுற்றுப்படை அமைக்கப்பட்டு, தினமும் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் ஜிஎஸ்டி (GST), இ-வே பில் (E-Way Bill), சரக்கு ஆவணங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்திற்கு நூற்றுக்கணக்கான ஆய்வுகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்கள் மூலம் வணிகர்களுக்கு ஜிஎஸ்டி ரசீதுகள், இ-வே பில், இருப்பு பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பராமரிக்கவும், துண்டுச்சீட்டு மற்றும் எஸ்டிமேட் ஸ்லிப் பயன்பாட்டில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், சுங்கச்சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் அதிகாரிகள், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தபோதும் ஓட்டுநர்களிடம் மிரட்டும் தொனியில் பேசுவதாகவும், தேவையற்ற அபராதங்கள் விதிக்கப்படுவதாகவும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சில வாகன ஓட்டுநர்கள், "அபராதம் உடனடியாக செலுத்தவில்லை என்றால் வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்வோம் என்று அதிகாரிகள் மிரட்டுகின்றனர்" என்றும் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மாட்டுத் தீவனம் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரிடம் தேவையற்ற கெடுபிடி நடந்ததாக மாட்டுத் தீவன முகவர் ஒருவர் தெரிவித்தார். "எங்கள் தரப்பில் தவறு இருந்தால் அபராதம் செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் அளவுக்கு மீறிய அபராதமும், பேரம் பேசும் போதும் வாகன கேமராக்களை திருப்பிவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து, கடலூர் மண்டல வர்த்தக சங்கத் தலைவரும், வணிக வரித்துறையின் வணிகர் நலக்குழு உறுப்பினருமான சண்முகம், "எரிபொருள் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம், போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்தித்து வரும் வணிகர்களை, வணிக வரித்துறையும் தேவையற்ற சிரமத்திற்கு உள்ளாக்குவது நியாயமல்ல. அதிகாரிகள் வணிகர்களிடம் கனிவாகவும் சட்ட விதிகளுக்குட்பட்டும் நடந்து கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளித்த வணிக வரித்துறை அதிகாரி, "யாரிடமும் மிரட்டும் தொனியில் பேசக் கூடாது. விதிகளின்படி உரிய அபராதம் மட்டுமே விதிக்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் யாரேனும் தேவையற்ற நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டால், அது குறித்து புகார் அளிக்கலாம். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
குறிப்பு: இந்த செய்தியில் இடம்பெறும் குற்றச்சாட்டுகள் வணிகர்கள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலானவை. அதேபோல், வணிக வரித்துறையின் விளக்கமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
