கொல்கத்தா: மேற்கு வங்க அரசியல் சூழல் பரபரப்பாக உள்ள நிலையில், "என்னை மவுனமாக்க வேண்டுமெனில் நீங்கள் என்னை கொல்ல வேண்டியிருக்கும்" என்று மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் (TMC) தலைவருமான மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் மற்றும் அவமானங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"எங்கள் கட்சியின் தலைவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மஹுவா மொய்த்ரா, அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட பலர் குறிவைக்கப்பட்டுள்ளனர். எனது வீட்டுக்குக் கூட தாக்குதல் நடத்தப்பட்டது. என்னை மவுனமாக்க வேண்டும் என்றால் என்னை கொல்ல வேண்டியிருக்கும்," என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேலும், தனது கட்சியினர் பலர் காவல்நிலையங்களில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், சிலர் தரையில் உறங்க வைக்கப்பட்டதாகவும், சிலர் கயிறு கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், சிலருக்கு அவமானகரமான செயல்கள் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாகவும், அதுபோன்ற அழுத்தங்களுக்கு தங்கள் கட்சி ஒருபோதும் அடிபணியாது என்றும் அவர் கூறினார்.
மேலும், மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களின் அடிப்படை தேவைகளைவிட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் அண்மைக்கால அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மாற்றங்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் தனித்தனியாக செயல்படுவது மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு: இந்த செய்தியில் இடம்பெறும் குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துகள் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையின் அடிப்படையிலானவை. சம்பந்தப்பட்ட தரப்பின் பதில் வெளியாகும் பட்சத்தில் அது தனியாக வெளியிடப்படும்.
