“கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசியது பதவிப் பிரமாணத்துக்கு எதிரானது” – முதல்வர் விஜயை விமர்சித்த அப்பாவு

 

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் பொதுவெளியில் கருத்து தெரிவித்தது குறித்து, “சிபிஐ விசாரணையில் உள்ள விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசுவது பதவிப் பிரமாணத்துக்கு எதிரான செயல்” என்று சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும், 41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்பதை தமிழக முதல்வர் அறியாதவரா? இது பதவிப் பிரமாணத்துக்கு எதிரான குற்றம் என்பதை முதல்வர் உணர வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “41 பேரின் உயிரிழப்புக்கு காவல்துறையே காரணம் என்று ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது முதல்வருக்கு ஏற்றதா? டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானபோது இதே குற்றச்சாட்டுகளை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தீர்களா?” என்றும் அவர் வினவியுள்ளார்.

அப்பாவு தனது அறிக்கையில், “தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் ஆலோசனையின்படி முதல்வர் செயல்படுகிறாரா, அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வழிகாட்டுதலின்படி வசன அரசியல் செய்கிறாரா?” என்றும் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய ‘கட்சி நிதி’ குறித்த கருத்தையும் சுட்டிக்காட்டிய அவர், “தேர்தலுக்கு முன்பு தவெக வேட்பாளர்களிடம் ரூ.2 கோடி முதல் ரூ.10 கோடி வரை கட்சி நிதி பெற்றதாக உங்கள் கட்சியினரே கூறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. அது கட்சி நிதி அல்லவா? இதுவே தூய அரசியலின் அடையாளமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கையில், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கருத்துக்களை தவிர்த்து சட்ட நடைமுறைகளை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகள் சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

Previous Next

نموذج الاتصال