சென்னை:
தமிழ்நாடு முழுவதும் செயல்படும் டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து பார் உரிமையாளர்களுக்கும் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பார்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) ஐ.எஸ்.ஐ. தரச் சான்று பெற்றவையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது அல்லது தரமற்ற பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பார் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பார்களில் உணவு மற்றும் பானப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதோடு, பொதுமக்களின் நலன் மற்றும் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.