பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டும்: இபிஎஸ்

 

சென்னை:


இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காசிமேடு உள்ளிட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை உடனடியாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கடலுக்குச் செல்லும் போது கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விசைப்படகுகள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இருப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இலங்கை அரசுடன் விரைவான பேச்சுவார்த்தை நடத்தி, பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடி படகுகளையும் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீனவர்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


மேலும், கடல்சார் எல்லைப் பகுதிகளில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வை உருவாக்குவதற்காக இருநாட்டு அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال