கட்டுமானப் பொருட்கள் போக்குவரத்துக்கு தளர்வு வழங்க வேண்டும்: கேரள முதல்வர் கோரிக்கை

 

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்குமாறு கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.


அந்தக் கடிதத்தில், தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறைகளால் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் கற்கள் மற்றும் பிற கட்டுமானப் பொருட்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் பெரும்பகுதி தமிழ்நாட்டிலிருந்தே கிடைப்பதாகவும், தற்போதைய கட்டுப்பாடுகள் திட்டப் பணிகளில் தாமதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இரு மாநிலங்களும் நீண்டகாலமாக நல்லுறவுடன் செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்தை மதிப்பதாகவும், அதே நேரத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக தேவையான கட்டுமானப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் உரிய தளர்வு அல்லது மாற்று நடைமுறையை ஏற்படுத்த பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு மட்டுமே கட்டுமானப் பொருட்கள் தடையின்றி கொண்டு செல்லும் வகையில் தீர்வு காணப்பட்டால், இரு மாநிலங்களின் வளர்ச்சிக்கும் பரஸ்பர ஒத்துழைப்புக்கும் அது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال