இடுக்கு பிள்ளையார் கோயிலில் இரும்புத் தடுப்புகள் அமைப்பு

 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கோயில் நிர்வாகம் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.


கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாசரிமணிகுமார் என்பவர், கோயிலின் குறுகிய குகைப்பாதைக்குள் சென்று வெளியே வர முடியாமல் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு கோயிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இதன் ஒரு பகுதியாக, கோயில் நுழைவாயிலில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு இரும்புக் கம்பிகளுக்கு இடையிலான குறிப்பிட்ட இடைவெளி வழியாகச் செல்லக்கூடிய பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதி வழங்கப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும், உடல் பருமன் கொண்டவர்கள், முதியவர்கள், மூச்சுத் திணறல் அல்லது பிற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த குறுகிய பாதை வழியாகச் செல்லக் கூடாது என்று எச்சரிக்கை பலகையும் நிறுவப்பட்டுள்ளது.


கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பவுர்ணமி நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறும் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال