பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்: மாணிக்கம் தாகூர்

 

பட்டமளிப்பு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டில் நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்ட நடைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் முக்கிய நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்தில் பாடப்படுவது மரபாக இருந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு நிகழ்ச்சிகள் நடைபெற்று, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த மரபு பட்டமளிப்பு விழாக்களிலும் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இடம்பெற தேவையான வழிகாட்டுதல்களை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


தமிழ் மொழிக்கும் அதன் பண்பாட்டு மரபுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுவது மிகவும் அவசியம் என்றும், மாநிலத்தின் பாரம்பரிய நடைமுறைகளை மதித்து பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தனது கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Previous Next

نموذج الاتصال