தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணிகளின்போது பழங்காலத்தைச் சேர்ந்த உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இந்த உறைகிணறுகள், அப்பகுதியில் பண்டைய கால மனிதர்களின் குடியிருப்பு, நீர் மேலாண்மை மற்றும் நகரமைப்பு திறனை வெளிப்படுத்தும் முக்கிய தொல்லியல் சான்றுகளாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மண் வளையங்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி அமைக்கப்பட்டுள்ள இந்த உறைகிணறுகள், சங்ககால வாழ்வியலின் முக்கிய அம்சங்களை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் கட்டுமான முறை மற்றும் வடிவமைப்பு குறித்து தொல்லியல் நிபுணர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்பும் தமிழகத்தின் பல்வேறு தொல்லியல் தளங்களில் இதுபோன்ற உறைகிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பட்டினமருதூரில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய சான்றுகள் அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல தொன்மையான பொருட்கள் மற்றும் கட்டமைப்புகள் கிடைக்கக்கூடும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.