இஸ்லாமாபாத்:
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த முயற்சிகளில் நடுநிலை வகித்ததைத் தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் அமெரிக்காவிடம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.96 ஆயிரம் கோடி) நிதியுதவியை பாகிஸ்தான் அரசு கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப், அமெரிக்க கருவூலச் செயலருடன் நடைபெற்ற சந்திப்பின்போது, ஐந்து ஆண்டுகள் கால அவகாசத்துடன் "இருதரப்பு நாணய நிலைநிறுத்த ஆதரவு நிதி" (Bilateral Exchange Stabilization Support Facility) அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிதி கிடைத்தால், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை சார்ந்திருக்கும் நிலையை ஓரளவு குறைக்கவும் உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
அண்மையில் ஈரான் தொடர்பான பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக எண்ணெய் இறக்குமதி செலவு உயர்ந்ததுடன், பாகிஸ்தானின் பொருளாதாரத்திலும் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்காவின் நிதி ஆதரவைப் பெறும் முயற்சியில் இஸ்லாமாபாத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
எனினும், பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.