தெலங்கானாவில் அதிர்ச்சி: போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்த நபர் மனைவி, குழந்தைகள் உட்பட 6 பேரை கொடூரமாகக் கொலை

 

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நபர் ஒருவர், தனது மனைவி, இரு குழந்தைகள் மற்றும் வழக்கில் புகார் அளித்த சிறுமி உட்பட 6 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் தரப்பின் தகவலின்படி, 35 வயதான ராஜ்குமார் என்பவர் மீது கடந்த மே 16-ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மே 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ரூ.20,000 தனிநபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களிலேயே, ஜூலை 10 இரவு, ஷாபாத் பகுதியில் உள்ள தனது மீது புகார் அளித்த 16 வயது சிறுமியின் வீட்டிற்குச் சென்ற ராஜ்குமார், அங்கு இருந்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பின், அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் சென்று, தனது கிராமம் அருகே உள்ள ஏரி பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர், தனது வீட்டிற்குச் சென்ற அவர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் 4 வயது, 18 மாதங்கள் வயதுடைய இரண்டு மகன்களையும் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைகளைச் செய்த பிறகு, ராஜ்குமார் தனது தந்தைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தலைமறைவான ராஜ்குமாரை கைது செய்ய சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களிலேயே இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது, ஜாமீன் நடைமுறைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Previous Next

نموذج الاتصال