பழநி, திண்டுக்கல்: உலகப் புகழ்பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு கட்டண சேவைகள், நன்கொடைகள், சொத்து வருவாய் மற்றும் முதலீட்டு வட்டி உள்ளிட்ட வழிகளில் ரூ.1,414.83 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். அதே காலகட்டத்தில் பக்தர்கள் நலனுக்காக வழங்கப்பட்ட 28 இலவச சேவைகளுக்கு ரூ.145.26 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது. பக்தர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் கட்டண மற்றும் இலவச சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
சிறப்பு தரிசனம், அபிஷேகம், அர்ச்சனை, தங்கத் தொட்டில் பிரார்த்தனை, பூஜைப் பொருட்கள் மற்றும் புகழ்பெற்ற பழநி பஞ்சாமிர்தம் விற்பனை, நன்கொடைகள், சொத்து வருவாய், முதலீட்டு வட்டி, தங்கும் விடுதி வாடகை உள்ளிட்ட 33 வகையான வருவாய் மூலங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,414.83 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதில், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.353.89 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் சராசரியாக ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை வருவாய் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2020–21ஆம் ஆண்டில் ரூ.110.61 கோடியாக இருந்த ஆண்டு வருவாய், ஐந்து ஆண்டுகளில் ரூ.243.28 கோடியாக உயர்ந்து இருமடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் நலனை முன்னிட்டு தேவஸ்தானம் பல்வேறு இலவச சேவைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. நாள் முழுவதும் அன்னதானம், இலவச பிரசாதம், குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், தேவஸ்தான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு வேளை உணவு, மாற்றுத்திறனாளிகளுக்கு ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் இலவச பயண வசதி உள்ளிட்ட 28 இலவச சேவைகள் நடைமுறையில் உள்ளன.
இதுகுறித்து இணை ஆணையர் மாரிமுத்து கூறுகையில், "பக்தர்களின் வசதி மற்றும் நலனை முதன்மையாகக் கொண்டு தேவஸ்தானம் பல்வேறு சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த இலவச சேவைகளுக்காக ரூ.145.26 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்" என்றார்.
பழநி முருகன் கோயிலின் வருவாய் உயர்வும், அதே நேரத்தில் பக்தர்களுக்கான இலவச சேவைகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முதலீடும், கோயில் நிர்வாகத்தின் சேவை நோக்கை வெளிப்படுத்துவதாக பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
