புதுடெல்லி / சத்திரபதி சம்பாஜிநகர்: மகாராஷ்டிர மாநிலத்தின் சத்திரபதி சம்பாஜிநகர் (Chhatrapati Sambhajinagar, Maharashtra) பகுதியில், மறைந்த ரவுடி பாபா ஃபர்சான் தொடர்புடைய சொகுசு பங்களாவில் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.5.26 கோடி கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1990-களில் சத்திரபதி சம்பாஜிநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க ரவுடியாக செயல்பட்டதாகக் கூறப்படும் பாபா ஃபர்சான் மீது கொலை முயற்சி, ஆட்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக அவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குற்றப்பிரிவு போலீஸார் அவரது பங்களா மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது இரண்டாவது மனைவி ஷீலா கணபத்ராவ் சால்வே வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
சோதனையில் ரூ.5,26,29,560 மதிப்பிலான கணக்கில் வராத ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. ரூ.100, ரூ.200, ரூ.50, ரூ.20 மற்றும் ரூ.10 நோட்டுகள் சிறிய கட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், மொத்த தொகையை கணக்கிட ஐந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுமார் ரூ.5.5 லட்சம் மதிப்பிலான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் இரண்டு பிஸ்டல்கள், நான்கு துப்பாக்கிகள், 12-போர் துப்பாக்கிகள், இரண்டு ஏர் கன், .22 துப்பாக்கி, ஒரு வாள், 17 கத்திகள் மற்றும் பல்வேறு கூர்மையான ஆயுதங்கள் அடங்கும்.
முதற்கட்ட விசாரணையில், சில ஆயுதங்களுக்கு பாபா ஃபர்சான் பெயரில் உரிமம் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட நிதி ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பினாமி சொத்துகள் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், 1990-களில் பதிவு செய்யப்பட்ட சில தீர்க்கப்படாத குற்ற வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.