சென்னை: அரசு பேருந்துகளின் கட்டணத்திலேயே ஆண்டு முழுவதும் 500 ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்க நிர்வாகிகள், விழாக்காலங்களில் கட்டண உயர்வு குறித்த புகார்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசு பேருந்து கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் பாண்டியன், அரசு அனுமதி வழங்கினால் ஆண்டு முழுவதும் 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், ஆம்னி பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகளுக்கு தனித்தனியாக அனுமதிச் சான்று (Permit) வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் சுற்றுலாத் துறை மேலும் வளர்ச்சி அடையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது 40 பேருந்துகளுக்கு எந்தவித லஞ்சமும் இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், முந்தைய ஆட்சியில் இதே அனுமதியை பெற ரூ.5 லட்சம் வரை செலவிட வேண்டியிருந்ததாக தெரிவித்தார்.
தற்போதைய நிர்வாகத்தில் அதிகாரிகள் வெளிப்படையாக செயல்படுவதால், இடைத்தரகர்களின் தலையீடு குறைந்துள்ளதாகவும், லஞ்சம் இல்லாமல் பணிகள் நடைபெறுவது வரவேற்கத்தக்க மாற்றம் என்றும் பாண்டியன் கூறினார்.