பொது மன்னிப்பு கோரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு; 2 வாரத்தில் அபராதம் செலுத்த வேண்டும்
புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நகைச்சுவை கலைஞர் சமய் ரெய்னா உள்ளிட்ட 5 பேருக்கு தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு, யூடியூபில் ஒளிபரப்பான "India's Got Latent" நிகழ்ச்சியில், சமய் ரெய்னா மற்றும் மற்ற நகைச்சுவை கலைஞர்கள் விபுல் கோயல், பால் ராஜ் காய், சோனாலி தாக்கர் மற்றும் நிஷாந்த் தன்வார் ஆகியோர், பார்வையற்றவர்கள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 5 பேருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையில், சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடம் மன்னிப்பு கோருமாறு நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அதனை அவர்கள் பின்பற்றவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, ஜே.வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமய் ரெய்னா, விபுல் கோயல், பால் ராஜ் காய், சோனாலி தாக்கர் மற்றும் நிஷாந்த் தன்வார் ஆகிய ஐந்து பேருக்கும் தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. இந்தத் தொகையை 2 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும், தவறினால் அபராதம் மேலும் உயர்த்தப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.
மேலும், "நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கும், தற்போதைய செயல்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்றுள்ளனர்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அத்துடன், ஐந்து நகைச்சுவை கலைஞர்களும் தங்களது செயலுக்காக பகிரங்கமாக பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.