புதுடெல்லி:
தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவான சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 47 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு பின்னர், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும், நிர்வாகத்தை வலுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இணையப் பாதுகாப்பு, தடயவியல் விசாரணை, தேர்வு மைய நிர்வாகம் மற்றும் மதிப்பீட்டு ஆய்வு போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
உள்துறை விசாரணைகளின் அடிப்படையில் சிலர் மீது சட்டரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் மேலும் பல நிர்வாக சீர்திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.