40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமரின் வரலாற்றுப் பயணம்: நியூசிலாந்தில் மோடிக்கு பிரதமர் லக்சன் உற்சாக வரவேற்பு

 ஆக்லாந்து: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நியூசிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆக்லாந்து விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்பு அளித்தார். கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் என்பதால், இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலிய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து ஆக்லாந்து சென்றடைந்தார். விமான நிலையத்தில் நியூசிலாந்து வாழ் இந்தியர்கள் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனது எக்ஸ் (X) பதிவில் பிரதமர் மோடி, "ஆக்லாந்து வந்தடைந்தேன். விமான நிலையத்தில் என்னை அன்புடன் வரவேற்ற பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு நன்றி. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த பிரதமர் மட்டப் பயணம், இந்தியா – நியூசிலாந்து உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் லக்சனுடன் நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்க ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்லாந்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், கர்நாடக மற்றும் இந்துஸ்தானி செவ்வியல் இசை, 'வந்தே மாதரம்' இசை நிகழ்ச்சி ஆகியவை இடம்பெற்றன. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்திய பாரம்பரியத்தை பாதுகாத்து வருவதை பாராட்டிய பிரதமர் மோடி, இந்தியா – நியூசிலாந்து மக்களிடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, இந்த பயணத்தின் போது இருநாட்டு பிரதமர்களும் வர்த்தகம், வணிகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும், தொழில்துறை, விளையாட்டு மற்றும் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்.

குறிப்பாக, இந்தியா – நியூசிலாந்து இடையே கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) இருநாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Previous Next

نموذج الاتصال