‘3,085 ஏக்கர் கோயில் நிலம் தனியாருக்கு பட்டா’ – தவெக அரசு மீது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

 

கோவை: கரூரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, கோயில் நிலங்களை மீட்க பாஜக போராடும் என்று தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற பாஜக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில், மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் உடன் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் கூறுகையில், "கரூரில் அறநிலையத் துறைக்கு சொந்தமான, சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள நான்கு கோயில்களின் 3,085 ஏக்கர் நிலத்திற்கு தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் முழு விவரங்களை ஆய்வு செய்த பிறகு விரிவான தகவல்களை வெளியிடுவோம். கோயில் சொத்துகளை பாதுகாக்க பாஜக சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராடும்" என்றார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டதைப் பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார். "அரசுப் பணியில் இருக்கும் போது உயிரிழந்த பல துறைகளின் பணியாளர்களின் குடும்பங்களும் கருணை அடிப்படையிலான நியமனத்துக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். அதேபோல், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு மட்டும் வேலை வழங்கப்படுவது குறித்து கேள்விகள் எழுகின்றன" என்று கூறினார்.

மேலும், கரூரில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை அரசு பள்ளிகளில் ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தையும் அவர் விமர்சித்தார். மாணவர்களை அரசியல் சார்ந்த நிகழ்வுகளுடன் இணைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இறுதி விசாரணை அறிக்கை வெளியான பிறகே கருத்து தெரிவிப்பேன். தவறு எங்கு நடந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து பேசுகையில், "அவரது அரசியல் நிலைப்பாடுகள் அடிக்கடி மாறுகின்றன. 2029 தேர்தலை முன்னிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவை எதிர்க்கும் நோக்கில் செயல்படுகின்றன" என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

குறிப்பு: கோயில் நிலம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

Previous Next

نموذج الاتصال