2 மாதங்களாக வேலை இல்லை...! கஞ்சி தொட்டி திறந்து போராடிய ஶ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர்கள் – இலவச சேலை திட்டத்தில் புதிய ரகத்துக்கு கடும் எதிர்ப்பு

வில்லிபுத்தூர்: தமிழக அரசின் பொங்கல் இலவச சேலை திட்டத்தில் புதிய சேலை ரகத்தை அறிமுகப்படுத்தியதற்கும், கடந்த இரண்டு மாதங்களாக நெசவாளர்களுக்கு நூல் வழங்கப்படாததற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி மற்றும் சேலை வழங்கி வருகிறது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான இலவச சீருடைகளும் கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பணிகள் விருதுநகர், மதுரை, தேனி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் 29 கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் 5,000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் நூல் வழங்கப்படாததால், ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் வேலை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதற்கிடையில், பொங்கல் இலவச சேலை திட்டத்திற்காக புதிய சேலை ரகத்தை அறிமுகப்படுத்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய ரகத்திற்கு ஏற்ப தறிகளை மாற்றியமைக்க ஒரு மாதத்திற்கும் மேலான கால அவகாசம் தேவைப்படுவதோடு, ஒவ்வொரு தறிக்கும் சுமார் ரூ.10,000 வரை கூடுதல் செலவாகும் என நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஶ்ரீவில்லிபுத்தூர் மாயண்டிப்பட்டி பகுதியில் உள்ள விநாயகர் கோயில் முன்பு ஆறு கூட்டுறவு நெசவாளர் சங்கங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட கைத்தறித் துறை உதவி இயக்குநர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வேலை இழப்புக்கான நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும், முன்பணமாக ஒவ்வொரு தறிக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும், ஒரு வாரத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இருப்பினும், புதிய சேலை ரகத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ரக சேலை உற்பத்திக்காக உடனடியாக நூல் வழங்க வேண்டும், இரண்டு மாத வேலை இழப்புக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும், நெசவாளர் கூலியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நெசவாளர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டத்தின் போது, ஒரு அரசியல் கட்சியின் உள்ளூர் நிர்வாகி போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தியபோது, "இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு எங்களுக்கு வேலை இல்லை" என்று கூறி நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Previous Next

نموذج الاتصال