நொய்டா குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு

 

நொய்டா:


உத்தர பிரதேச மாநிலம் நொய்டா செக்டர்-66 பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், பெண் ஒருவரைச் சேர்த்து 2 பேர் உயிரிழந்தனர். மின்சார வாகன (EV) பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டபோது ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தகவலின்படி, குடியிருப்பின் தரைத்தளத்தில் மின்சார வாகனத்தின் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் வாகனங்களுக்கும் தீ வேகமாக பரவி, சில நிமிடங்களில் கட்டிடம் முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்தது.


தகவல் கிடைத்ததும், 7 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹைட்ராலிக் ஏணிகளுடன் தீயணைப்பு வீரர்கள், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இந்த விபத்தில் அடர்ந்த புகையில் சிக்கி பெண் ஒருவரைச் சேர்த்து 2 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தில் இருந்த மற்ற குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும், கட்டிடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா, பாதுகாப்பு உபகரணங்கள் செயல்பாட்டில் இருந்தனவா என்பது குறித்து போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال