‘நலம் TN’ இணையதளம் தொடக்கம்; அரசு மருத்துவமனைகள் மேம்பாட்டுக்கு நன்கொடை பெற புதிய முயற்சி
சென்னை: அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ‘நலம் TN’ என்ற புதிய இணையதளத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-2) என மொத்தம் 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகம் (Chepauk, Chennai) நடைபெற்ற நிகழ்ச்சியில், www.tnhealthfoundation.org என்ற ‘நலம் TN’ இணையதளத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளம் மூலம், அரசு மருத்துவமனைகளின் வளர்ச்சிக்காக பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி (CSR), தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் தாங்கள் விரும்பும் அரசு மருத்துவமனைக்கு நேரடியாக நன்கொடை வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த இணையதளம் முக்கிய பங்காற்றும் என்று தெரிவித்தார்.
நிகழ்வின் போது, சென்னை கேப்ளின் பாய்ன்ட் லேபரட்டரீஸ் மற்றும் அப்போலோ மருத்துவமனை குழுமம் ஆகியவை தலா ரூ.1 கோடி சமூகப் பொறுப்பு நிதி காசோலைகளை வழங்கின. மேலும், ஓசூரைச் சேர்ந்த டைட்டன் இன்ஜினியரிங் & ஆட்டோமேஷன் நிறுவனம் ரூ.60 லட்சம் நன்கொடையாக வழங்கியது.
சென்னையைச் சேர்ந்த எஸ். சத்யா, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் பெற்ற மருத்துவ சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ‘நலம் TN’ திட்டத்தின் கீழ் QR Code மூலம் ரூ.1,000 நன்கொடையை முதல்வர் முன்னிலையில் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ரூ.139.47 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மருத்துவக் கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.
பின்னர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதில், முதல் நியமன ஆணையை மேடையிலிருந்து இறங்கி சென்று மாற்றுத்திறனாளி பெண் மருத்துவருக்கு வழங்கிய முதல்வர் விஜய், நிகழ்ச்சியின் இறுதியில் புதிதாக நியமனம் பெற்ற பணியாளர்களுடன் குழு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
