இணைய வேகம் குறைவால் சிசிடிஎன்எஸ் 2.0 பயன்பாட்டில் சிக்கல்: காவல்துறையினர் கோரிக்கை

 திருச்சி (Tiruchirappalli / Trichy): தமிழக காவல் நிலையங்களில் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிசிடிஎன்எஸ் 2.0 (Crime and Criminal Tracking Network & Systems - CCTNS 2.0) மென்பொருளை முழுமையாக பயன்படுத்த தேவையான அதிவேக இணைய வசதி மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக காவல்துறையில் கடந்த பிப்ரவரி 26 முதல் சிசிடிஎன்எஸ் 2.0 மென்பொருள் பயன்பாட்டில் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, சிஎஸ்ஆர் (CSR) மற்றும் முதல் தகவல் அறிக்கை (FIR) நகல்கள் வழங்கப்படுகின்றன.

இந்த அமைப்பு, ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி அமைப்பு (Integrated Criminal Justice System - ICJS) உடன் இணைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது புகாரின் நிலையை இணையதளம் வழியாக அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் சரிபார்ப்பு (Police Verification), வேலைவாய்ப்பு, வாடகைதாரர் மற்றும் வீட்டுப் பணியாளர் சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத சடலங்கள் தொடர்பான தகவல்களையும் இந்த அமைப்பு மூலம் தேட முடியும்.

ஆனால், இந்த மென்பொருளைப் பயன்படுத்தும் நடைமுறையில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், தரமான இணைய வசதி இல்லாததால் ஒரு எஃப்ஐஆர் பதிவேற்றம் செய்ய குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை ஆகிறது என்று தெரிவித்தனர்.

மேலும், ஒவ்வொரு கட்டத்திலும் விசாரணை அதிகாரியின் (Investigation Officer - IO) ஒப்புதலுக்காக ஓடிபி (OTP) சரிபார்ப்பு நடைமுறை இருப்பதால் பணிகள் தாமதமாகின்றன என்றும், புகார் அளிப்பவரின் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டிய நடைமுறையும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறினர்.

முன்னதாக குற்றச்சாட்டுக்குட்பட்ட நபரின் பெயர் மற்றும் தந்தை பெயரை உள்ளீடு செய்தாலே பழைய வழக்குத் தகவல்களை பெற முடிந்த நிலையில், தற்போது ஆதார் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் அவசியமாகியிருப்பதால் தேடல் நடைமுறை சிக்கலாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும், சிசிடிஎன்எஸ் 2.0 மென்பொருள் திறம்பட செயல்பட தேவையான இணைய வசதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை தமிழக அரசு விரைவில் வழங்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்


Previous Next

نموذج الاتصال