மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி மீது சர்ச்சை; கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் பறிப்பு
செங்கல்பட்டு: ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான என். வீரா (எ) வீராசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மாம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு (Mambakkam, Thiruporur, Chengalpattu) பகுதியில் ரூ.9.80 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் நவீன், பணிகள் நிறைவடைந்த பிறகும் பில் அனுமதி வழங்கப்படாமல் இருந்ததாகவும், அதனை ஒப்புதல் அளிக்க முதலில் ரூ.1 லட்சம் லஞ்சம் கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொகை ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதன் ஒரு பகுதி Google Pay மூலம் செலுத்தப்பட்டதுடன், மீதமுள்ள தொகை நேரடியாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.வி. தினகரன் (எ) தீனா, ஜூலை 15 அன்று வெளியிட்ட அறிவிப்பில், "கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், வீரா (எ) வீராசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
வீராசாமி மீது கடந்த 2023-ஆம் ஆண்டு, ஊராட்சி நிர்வாக முறைகேடு தொடர்பாக வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்ததாகவும், அதன் பின்னர் அவரது காசோலை கையொப்ப அதிகாரம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 2025-ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தலைவர் பதவியை இழந்த அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மீண்டும் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.