சென்னை: கடந்த 13 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்று, இதுவரை பணி நியமனம் பெறாமல் காத்திருக்கும் 410 பேருக்கு தமிழக அரசு உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 2013 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பையும் நிறைவு செய்த பலர் இதுவரை பணியில் சேர்க்கப்படாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த 410 பேரையும் தகுதி, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின் அடிப்படையில் விரைந்து பணியில் அமர்த்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை தமிழக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீண்ட காலமாக பணிக்காக காத்திருக்கும் தகுதியான ஆசிரியர்களுக்கு நீதி வழங்குவதோடு, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.