திருவல்லிக்கேணியில் ரூ.11 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

 

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான போலி ₹500 நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் திருவல்லிக்கேணி போலீஸார் இணைந்து நடத்திய சோதனையின் போது மேற்கொள்ளப்பட்டது.


ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த சபிக் ரஹ்மான் (37) என்பவரின் அறையில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.


அவர் அளித்த தகவலின் பேரில், தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.22.79 லட்சம் மதிப்பிலான உண்மையான ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதற்கிடையில், சென்னை ராமாபுரம், கோத்தாரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள நோட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கருப்பு தாள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சோதனை நடத்தினர்.


அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த அலுமினிய பெட்டியில், ரூபாய் நோட்டுகளின் அளவுக்கு வெட்டப்பட்ட சுமார் 40 கட்டு கருப்பு தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கள்ள நோட்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.


இந்த இரு சம்பவங்களையும் தொடர்புபடுத்தி போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال