100-க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேற்றம்: ‘எக்ஸிட்’ விதிகளை கடுமையாக்கியது மத்திய அரசு

 

புதுடெல்லி: முன்கூட்டிய ஓய்வு மற்றும் ராஜினாமா மூலம் 100-க்கும் மேற்பட்ட இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் வெளியேறியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, முக்கிய திட்டங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கான ‘எக்ஸிட்’ (Exit) விதிகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.


பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் (URSC) மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) உள்ளிட்ட மையங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சமீப காலத்தில் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின.


அவர்களில், ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுகணை வாகன (GSLV Mk III) திட்டத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப்பும் ஒருவர். அவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், பல முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்தியாவில் தற்போது 400-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. Pixxel, Dhruva Space, Skyroot Aerospace, Agnikul Cosmos மற்றும் Bellatrix Aerospace உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தத் துறையில் முன்னணி நிறுவனங்களாக உள்ளன.


இந்த சூழலில், ககன்யான் (Gaganyaan) மனித விண்வெளிப் பயணத் திட்டம் மற்றும் பிற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணியாற்றும் ‘ஏ’ பிரிவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு கோரிக்கைகளை வழக்கம்போல் ஏற்க வேண்டாம் என்று இந்திய விண்வெளித் துறை ஜூலை 14-ஆம் தேதி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.


தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விண்வெளித் திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விண்வெளித் துறை தெரிவித்துள்ளது.

Previous Next

نموذج الاتصال