திண்டுக்கல்: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க திண்டுக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பழநி அடிவாரம், சந்நிதி வீதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான மதிப்புமிக்க நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, பத்திரப் பதிவை மேற்கொண்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் உள்ளிட்ட நால்வர் மீது கூட்டுச் சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நில மோசடியில் உயர்மட்ட நபர்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
வியாழக்கிழமை பழநி அடிவாரம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் வழக்கு ஆவணங்களை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி அஜய் தங்கத்திடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விசாரணையை விரைவாக மேற்கொள்ள மதுரை, தேனி மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்து கூடுதல் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் போலீஸார் திண்டுக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, பழநியில் நேரடி ஆய்வு மற்றும் ஆவணச் சேகரிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.