புற்றுநோய் என்பது இப்போது பரவலாகவே அதிகரித்து வருகிறது. புற்றுநோயை பொருத்தவரை என்றைக்குமே வருமுன் காப்பது என்பது தான் நல்லது. வந்த பிறகு தீர்ப்பது என்பது கவலை தரக்கூடிய விஷயமாகி விடும்.
புற்றுநோயை வருமுன் காப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. புற்றுநோய் என்ன காரணத்தினால் வரும் என்பது தெரிந்தால் தான் நாம் அதை தவிர்க்க முடியும்.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பவாய் புற்றுநோயை தடுப்பதற்கு தடுப்பூசி வந்து விட்டது. அதேபோல் இன்னும் சிலவகையான புற்றுநோயை தடுப்பதற்கும் தடுப்பூசி உள்ளது. ஆனால் பெண்களை அதிகமாக பாதிக்கின்ற ஒரு புற்றுநோய் மார்பக புற்றுநோய் தான்.
இந்த மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகளை அறிய இன்று பலரும் இதை ஒரு ஆய்வாக எடுத்து செய்துகொண்டிருக்கிறார்கள்.
உலக அளவில் பெண்களை அதிகம் பாதிக்கின்ற புற்றுநோயில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் படி ஒரு வருட காலத்தில் 21 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் வருகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் புற்றுநோயால் இறப்பது தான் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்.
நமது நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் புதிய புற்றுநோயாளிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் 60 சதவீதம் பேருக்கு கடைசி நேரத்தில் தான் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது என்பது வருந்தத்தக்க விஷயம்.
இந்த மார்பக புற்றுநோயின் முக்கியமான விஷயமே ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் அதை முழுமையாக சரிப்படுத்த முடியும். வாழ்நாள் முழுவதும் நல்ல முறையில் வாழவும் முடியும்.
மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு பல காரணங்களை சொல்லி இருக்கிறார்கள். அந்த காரணங்களை தெரிந்து கொள்ளும் நிலையில் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கும் முறைகளை கடைபிடிக்க முடியும்.
மரபுவழியாக:
முக்கியமாக உங்கள் குடும்பங்களில் அம்மா, பாட்டி, சித்தி, அத்தை உள்ளிட்ட நெருங்கிய ரத்த சொந்தங்கள் யாருக்காவது ஏதாவது ஒரு வகை புற்றுநோய் வந்திருந்தாலோ அல்லது மார்பக புற்றுநோயோ, கர்ப்பவாய் புற்றுநோயோ வந்திருந்தால் கண்டிப்பாக அது உங்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே மரபு ரீதியாக மார்பக புற்றுநோய் மரபணு 1 (ப்ராக்கா 1), மார்பக புற்றுநோய் மரபணு 2 (ப்ராக்கா 2) இருக்கிறவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே உங்கள் குடும்பங்களில் யாருக்காவது புற்றுநோய் வந்திருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு மரபுவழி பரிசோதனை செய்து புற்றுநோய் மரபணு இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அது பாசிட்டிவா அல்லது நெகட்டிவா என்று பார்த்தால் உங்களுடைய ஆபத்து காரணிகள் தெரியும்.
குடும்ப மரபுவழி, ஹார்மோன் சார்ந்திருத்தல், உடல் ரீதியான வாழ்க்கை முறை காரணிகள் ஆகிய மூன்றும் தான் புற்றுநோய் வருவதற்கான முக்கியமான காரணங்கள் ஆகும்.
ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும் பெண்கள்:
பொதுவாக மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணமே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருப்பது தான். மார்பகத்தில் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகள் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஏற்பிகள் ஆகியவை இருக்கிறது.
ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகும் போது இந்த ஏற்பிகளின் செயல்பாடுகள் அதிகரித்து செல்களின் வளர்ச்சி தூண்டப்படும். அதன் காரணமாக மார்பகத்தில் பால் சுரக்கும் பகுதியில் இருக்கிற எபிடெலியல் செல்கள் தூண்டப்பட்டு அது வளரத் தொடங்கி கூடுதலாக வளர்ச்சி அடைந்து புற்றுநோயாக மாறுகிறது.
இந்த வகையில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
பொதுவாக ஈஸ்ட்ரோஜன் அதிகமாக யாருக்கு இருக்கும் என்று பார்த்தால் ரொம்ப காலம் மார்பகத்தில் ஈஸ்ட்ரோஜன் உருவாகும் பெண்களுக்கு தான் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக பல பெண்கள் 11 வயதுக்கு முன்பே பருவமடைகிறார்கள். பருவமடைதல் என்பது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பதை குறிக்கிறது. அதாவது அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் வரத்தொடங்கி விட்டது என்று அர்த்தம். இது குறிப்பிட்ட வயதுக்கு முன்பே பருவமடைதல் ஆகும்.
இரண்டாவது தாமதமான மெனோபாஸ், அதாவது 50 வயதுக்கு மேலும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் ஆவர். இந்த 2 வகையான பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக உள்ளது. மார்பக திசுக்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பதால் பல நேரங்களில் இது ஒரு ஆபத்து காரணியாக கருதப்படுகிறது.
ஹார்மோன்கள் இயற்கையாக வருவது அதிகமாக இருக்கும் கால கட்டங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருகிறது. அதனால் தான் சிறு வயதிலேயே பருவமடைந்த பெண்களுக்கு கண்டிப்பாக மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனையை ஆரம்ப நிலையிலேயே செய்ய வேண்டும்.
மேலும் 50 வயதை கடந்த பெண்களுக்கு மாதவிலக்கு நிற்காமல் வந்துகொண்டே இருந்தால் கண்டிப்பாக அவர்களும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்காத பெண்கள்:
இன்றும் பெண்களுக்கிடையே அதிகரித்து வருகிற ஒரு முக்கியமான பிரச்சனை கருத்தரிப்பதை தள்ளிப்போடுவது ஆகும்.
30 வயதை கடந்த பெண்கள் குழந்தை பேறு பெறுவதற்கான பல்வேறு சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்வது அதிகரித்து வரும் இந்த காலகட்டங்களில் மிகவும் தாமதமாக கருத்தரிப்பது ஒரு ஆபத்து காரணியாக கருதப்படுகிறது.
அதேபோல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு புரோஜெஸ்ட்ரோன் என்கிற ஹார்மோன் அதிகமாகும். ஈஸ்ட்ரோஜனுக்கு எதிராக இருக்கிற இன்னொரு ஹார்மோன் தான் புரோஜெஸ்ட்ரோன்.
பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தான் இந்த புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் உருவாகுதல் அதிகமாக இருக்கிறது. எனவே கருத்தரித்தல் தாமதமாகும் போது அதிக காலம் ஈஸ்ட்ரோஜன் உருவாகிறது.
அதேபோல் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு இந்த புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோனே இல்லாமல் ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கமே அதிகமாக இருகிறது. இதனால்தான் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது புரோஜெஸ்டிரோன், ஆக்சிடோசின் உள்ளிட்ட எல்லா ஏற்பிகளும் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளின் உணர்திறனை குறைக்கும். இவை அனைத்தும் பால் சுரப்பதற்கு முக்கியமான ஒன்றாகும்.
எனவே தாய்ப்பால் சரியாக கொடுக்காத பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் தாக்கம் அதிகமாகி அதனால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.