முருகப் பெருமானுக்கு உரிய முக்கியமான பண்டிகை... சஷ்டித் திருநாள். இந்தநாளில், லட்சக்கணக்கான பக்தர்கள், சஷ்டி விரதம் மேற்கொண்டு, முருகப்பெருமானை ஆராதித்து வழிபடுவார்கள். மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசியில் வருவது மகா சிவராத்திரி என்பது போல, மாதந்தோறும் ஏகாதசி வந்தாலும் மார்கழியில் வருவது வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடப்படுவது போல மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசியில் வருவதை கந்த சஷ்டி என்று கொண்டாடுகிறோம்.
அக்டோடபர் 28ம் தேதியான நேற்று கந்த சஷ்டி வைபவம் தொடங்கியது. இந்தநாளில் இருந்து ஆறுநாட்கள் விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். நவம்பர் 2ம் தேதி சூரசம்ஹாரம் எனும் பெருவிழாவுடன் கந்தசஷ்டியானது நிறைவடையும்.
ஆறுபடை நாயகனான முருகப்பெருமானுக்கு, இந்த கந்த சஷ்டி விழா, ஆறுபடையையும் கடந்து எல்லா முருகன் கோயிலிலும் விமரிசையாக நடைபெறும். என்றாலும் திருச்செந்தூர் திருத்தலத்தில், இந்த விழாவானது பிரமாண்டமாக நடைபெறும்.
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள், திருச்செந்தூர் திருத்தலத்தில் குழுமுவார்கள். கடல் நீராடி முருகப்பெருமானின் சூரசம்ஹாரத் திருவைபவத்தைக் கண்ணாரத் தரிசிப்பார்கள்.
சஷ்டியில் விரதம் மேற்கொண்டால், கஷ்டமெல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
மேலும் எவரொருவர் சஷ்டியில் விரதம் அனுஷ்டிக்கிறார்களோ அவர்களின் குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் யாவும் விரைவில் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆறு நாட்களும் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், ஏதேனும் ஒருநாள் விரதம் மேற்கொள்ளலாம். முருகப்பெருமானின் துதிகளைப் பாராயணம் செய்யலாம். வீட்டில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்கள் சூட்டி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்திப்பது விசேஷம்.