ஜோதிடத்தில் நமது முன்னோர்கள் மிக முக்கியமான விஷயங்களை சூட்சமமான முறையில் நமக்கு தந்து விட்டுப் போயிருக்கிறார்கள். அதன்படி பார்க்கும்போது ஒவ்வொரு ராசிக்கும் கடன்கள் அடைவதற்காக எந்தெந்த கடவுளை வழிபடலாம் என்ற பரிகார முறைகளையும் சொல்லி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ராசியினுடைய ஆறாம் வீடு ரண ருண ரோக ஸ்தானம் என்று அழைக்கப்படும். ஒவ்வொருவருடைய மன சம்பந்தமான வலி - உடல் சம்பந்தமான வலி - ஆரோக்கியம் - கடன் போன்றவைகளை நாம் ஆறாமிடத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் எந்த கிரகம் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை நாம் பார்க்கலாம்.
ஆறாம் இடத்தில் சூரியன் இருந்தால் வெப்பம் சம்பந்தமான விஷயங்கள் வெப்பநோய் சம்பந்தமான விஷயங்களும் அரசு சார்ந்த கடன்களும் இருக்கலாம்.
சந்திரன் இருந்தால் நீர் சம்பந்தமான பிரச்சினைகளும் சீக்கிரமே அடையக்கூடிய கடனும் இருக்கலாம்.
செவ்வாய் இருந்தால் ரத்தம் சம்பந்தமான பிரச்சினைகளும் பூமி சம்பந்தமான கடனும் இருக்கலாம். இவர்களுக்கு மருத்துவ செலவுகள் அடிக்கடி ஏற்படும்.
புதன் இருந்தால் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் பணம் சம்பந்தமான பிரச்சினைகளும் இருக்கலாம்.
குரு இருந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் தெய்வ கடன் சம்பந்தமான விஷயங்கள் இருக்கலாம்.
சுக்கிரன் இருந்தால் மறைவிடங்களில் பிரச்சினைகளும் - கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் இருக்கலாம்.
சனி இருந்தால் முழங்கால் முழங்கை இடுப்பு சம்பந்தமான இடங்களில் பிரச்சினைகளும் பூமியை சம்பந்தமான இடங்களில் பிரச்சினைகளும் இருக்கலாம்.
ராகு இருந்தால் முகம் சம்பந்தமான பிரச்சினைகளும் பூர்வீக வழியில் சொத்துக்கள் பிரச்சினைகளும் இருக்கலாம்.
கேது இருந்தால் ஞாபக மறதி சம்பந்தமான விஷயங்களில் சிறிது இறக்கங்களும் கையிருப்பு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படும்.
இனி ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்ன பரிகாரம் செய்தால் கடன்கள் சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம்.
மேஷராசிக்காரர்கள் புதன்கிழமை தோறும் துளசியை பெருமாளுக்கு சமர்ப்பித்து வணங்கி வருவதன் மூலம் கடந்து சம்பந்தமான பிரச்சினைகள் குறையும். இவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது - நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்வது மிகப்பெரிய பரிகாரம். புதன் ஹோரையில் கடன்களை அடைப்பது இவர்களுக்கு நன்மையை கொடுக்கும்.
ரிஷப ராசிக்காரர்கள் மல்லிகையை மகாலட்சுமிக்கு சமர்ப்பித்து வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி வணங்கி வருவது நன்மையை கொடுக்கும். தினசரி உடலில் வெள்ளை ஆடைகளை பயன்படுத்துவதும் மாற்றத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் இவர்கள் கடன்களை அடைக்கத் தொடங்குவது மிகுந்த பலத்தைக் கொடுக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் செவ்வாய் ஹோரையில் செவ்வரளி மலரை முருகனுக்கு சமர்ப்பித்து கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது அனுகூலத்தை கொடுக்கும். வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்வது மாற்றத்தை கொடுக்கும் கடன்களை அடைக்கும். புதன் மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் கடனை ஆரம்பிக்கத் தொடங்குவது நன்மையைக் கொடுக்கும்.
கடக ராசிக்காரர்கள் குரு ஹோரையில் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அவர்களுக்கு நன்மை வந்து சேரும். கடன்கள் அடைபடும் காலகட்டமும் இதுதான். குரு ஹோரையில் இவர்கள் சிறு பகுதி கடன்களை அடைக்கத் தொடங்குவது இவர்களுக்கு மாற்றத்தைக் கொடுக்கும். சிவனை வணங்கி வருவது நன்மையைக் கொடுக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் விநாயகர் அகவல் சொல்வதும் - அருகம்புல்லை விநாயகருக்கு சமர்ப்பிப்பதும் நன்மையைக் கொடுக்கும். சூரியன் மற்றும் செவ்வாய் ஹோரையில் கடன்களை அடைக்கத் தொடங்குவது இவர்களுக்கு நன்மையைக் கொடுக்கும். புதிய விஷயங்களை ஆரம்பிப்பது கூட இவர்கள் சூரியன் மற்றும் செவ்வாய் திசையில் ஆரம்பிப்பது மிகுந்த மாற்றத்தைக் கொடுக்கும்.
கன்னி ராசிக்காரர்கள் பைரவர் வழிபாடு செய்து வருவதும் நவக்கிரகங்கள் வழிபாடு செய்து வருவதும் மிகுந்த மாற்றத்தைக் கொடுக்க வல்லது. இந்த வழிபாட்டுடன் புதன், குரு மற்றும் சுக்கிரஹோரைக்ளில், கடன்களை அடைக்க தொடங்குவதன் மூலம் இவர்கள் வாழ்வில் மாற்றத்தைப் பார்க்கலாம்.
துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரன் மற்றும் குரு ஹோரையில் கடன்களை அடைக்க ஆரம்பிப்பது நன்மையைக் கொடுக்கும். மகாலட்சுமி அஷ்டோத்திரம் மகாலட்சுமிக்கு தாமரை மலர் சார்த்தி வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் கந்த குரு கவசம் சொல்லி முருகன் வழிபாடு செய்து வருவதும் வேல் பூஜை செய்வது போன்ற விஷயங்கள் செய்வதும் கடன்கள் அடைவதற்கான சூழ்நிலையை கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் இவர்கள் கடன்களை அடைக்க தொடங்குவது மிகுந்த நன்மையை கொடுக்கவல்லது.
தனுசு ராசிக்காரர்கள் சுமங்கலி பூஜை செய்து வருவதும் - மஞ்சள் பொடியால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதும் கடன்களை அடைப்பதற்கான நல்ல பரிகாரம். குரு மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கடன்கள் அடைவதற்கான நல்ல சூழ்நிலைகள் இவர்களுக்கு ஏற்படும்.
மகர ராசிக்காரர்கள், குலதெய்வ வழிபாடும் முன்னோர்கள் வழிபாடும் செய்து வருவது மிகுந்த நன்மையைக் கொடுக்கும். வாராஹி தேவிக்கு இவர்கள் பூஜை செய்து வணங்கி வருவது கடன்களை அடைப்பதற்கான நல்ல பரிகாரமாக அமைந்திருக்கும். புதன் மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் இவர்கள் இதை செய்வது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
கும்ப ராசிக்காரர்கள் அபிராமி அந்தாதி சொல்லி அம்பாள் வழிபாடு செய்து வருவது மிக நல்ல பரிகாரம். செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஹோரைகளை இவர்கள் பயன்படுத்துவதன் மூலம் கடன்கள் அடைவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உருவாகும். தினசரி வீட்டில் ஐந்து முக தீபம் ஏற்றி அம்மனை வழிபாடு செய்து வருவதும் நல்ல மாற்றத்தினையும் ஏற்றத்தையும் கொடுக்கும்.
மீன ராசிக்காரர்கள் கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் வழிபாடு செய்து வருவது மிகுந்த நன்மையை கொடுக்கும். மீன்களுக்கு உணவு அளிப்பது மற்றும் ஜீவராசிகளுக்கு உணவு அளிப்பது போன்றவை இவர்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய பரிகாரம். செவ்வாய் மற்றும் குரு ஹோரைகளில் இவர்கள் கடன்களை அடைக்க ஆரம்பிப்பது என்பது மிகுந்த நன்மை கொடுக்கக் கூடிய அற்புதமான பரிகாரம்.