கொழுப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பலருக்கு பயம் வரும். ஏனெனில் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது மாரடைப்பு போன்ற திடீர் மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உண்மையில், கொழுப்பு உடலுக்கு முக்கியமான ஒன்று. கொழுப்பு என்பது ஒவ்வொரு உயிர் அணுவிலும் இருக்கின்ற இயற்கையான பொருள் ஆகும். மனித உடலில் சுரக்கும் ஜீரண நீர்கள், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் 'டி'-யை உற்பத்தி செய்வதில் கொழுப்பு பெரும் பங்கு வகிக்கிறது. நரம்பு, தசைநார்களை காக்கும் பணியையும் செய்கிறது.
உடலின் தசைகளிலும், ரத்தத்திலும் காணப்படும் 80 சதவீத கொழுப்பு உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது. 20 சதவீத கொழுப்பு மட்டுமே உணவு மூலம் உற்பத்தியாகிறது. மனித உடல் தனக்கு தேவையான கொழுப்பை தானே உற்பத்தி செய்து கொண்டு, உடலுக்கு தேவையான அளவு பயன்படுத்திக் கொள்கிறது.
அதிக கொழுப்பு நிரம்பிய உணவுகளால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேரும்போது, உடல் தனது கொழுப்பு உற்பத்தியை குறைத்துக்கொண்டு உடலின் கொழுப்பு அளவை சமநிலை செய்கிறது.
கொழுப்பை ரத்தத்தில் உள்ள கொழுப்பு எனவும், உணவு மூலம் பெருகும் கொழுப்பு எனவும் 2 வகைகளாக பிரிக்கலாம். இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவு அதிகமாகும்போது மட்டுமே அது இதய நோய்க்கு காரணமாக அமைகிறது.
இதய நோய்க்கு உயர் ரத்த அழுத்தம், புகைத்தல், உடற்பயிற்சி இல்லாதது, நீரிழிவு நோய் ஆகியவையும் காரணங்களாக அமைகின்றன. உடலில் உருவாகும் நிறைவுற்ற கொழுப்பு ஏற்படுத்தும் விளைவை விடக் குறைந்த அளவு பாதிப்பே உணவில் உள்ள கொழுப்பு மூலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே கொழுப்பை பொறுத்தவரை, ரத்த கொழுப்பின் அளவு சீராக இருக்கும் வண்ணம் கவனித்துக் கொள்வதுதான் இதய பாதிப்புகளை தடுக்கும் வழி என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.